Thursday, 28 November 2013

முதுமையிலும் மனது இளமையாக....

வயதில் முதுமையாக இருந்தாலும் மனதை இளமையாக வைத்துக்கொள்ள எல்லோராலும் முடியும். அதற்கு தேவைப்படும் அடிப்படை விஷயங்கள் மூன்று. அவை: ஓய்வு, மன அழுத்தம் இல்லாமை, மகிழ்ச்சி. மனதை இளமையாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவர், எல்லா இடத்திலும், எல்லா சூழலிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
எவ்வளவு பரபரப்பான வேலையாக இருந்தாலும், இரண்டு மணி நேரம் கடந்ததும், அந்த இடத்தில் இருந்து எழுந்து, தங்களை சற்று `ரிலாக்ஸ்’ செய்துகொள்ள வேண்டும். ரிலாக்ஸ் செய்யாமல் தொடர்ந்து 6 மணிநேரம் வேலை பார்ப்பவர்கள், தங்கள் உடலை மட்டுமின்றி, மனதையும் முதுமையாக்கிக்கொள்கிறார்கள்.
அதனால் தொடர்ச்சியாக வேலைபார்த்துக்கொண்டிருக்கும் மூளைக்கும் தேவையான ஓய்வை கொடுத்தால்தான், மனதை இளமையாக்கிக்கொள்ள முடியும். தேவையான அளவு ஆழ்ந்து தூங்குவது மன இளமைக்கு வழிகாட்டும். தினமும் 6 மணி நேரமாவது ஆழ்ந்து தூங்கவேண்டும். தூங்குவதற்கு முன்னால் 15 நிமிடங்கள் தியானம் செய்தால் தூக்கம் நன்றாக வரும்.
வாழ்க்கையை போராட்டமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது. பிடிவாதம் பிடித்து, மன இறுக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மனதை இலகுவாக்கினால், உடல் நெகிழ்ச்சியடையும். அதன் மூலம் உடலும், மனதும் அமைதியடையும். வாழ்க்கையோடும், சூழ்நிலையோடும் பொருந்திப்போக முன்வரவேண்டும். நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழகவேண்டும். நல்ல நட்பு, மனதுக்கு உற்சாகத்தை தந்து, இளமையாக்கும்.
உங்களால் என்ன முடியுமோ அந்த அளவிற்கு உதவ வேண்டும். அதில் குறை கண்டுபிடித்து மனதை குழப்பிக்கொண்டிருக்கக்கூடாது. எல்லோரையும் விட தனது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நட்புடன் அவர்களுடன் பழகவேண்டும். மற்றவர்கள் நல்ல காரியங்கள் செய்யும்போது மனந்திறந்து பாராட்டுங்கள்.
நீங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டு கிடைக்கவில்லை என்றாலும், உங்களையே நீங்கள் பாராட்டி உவகைகொள்ளுங்கள். ஓய்வு நேரத்தை பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு, கொண்டாடுங்கள். அடுத்தவர்களை கேலி செய்தல், குறைசொல்லுதல், அவதூறுகளை பரப்புவது போன்றவைகளில் ஈடுபடாதீர்கள். இவைகளை எல்லாம் நீங்கள் கடைபிடித்தால், உங்கள் மனதுக்கு அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும். இவை இரண்டும் கிடைத்தால் மனது இளமையாகும்.

No comments:

Post a Comment